கிரிக்கெட் வீரர் ரெய்னாவின் உறவினர் கொலை வழக்கில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பின் நடைபெற இருப்பதால் இத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் வெற்றி முனைப்போடு தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரரான ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து, இந்தியா திரும்பினார். ரெய்னாவின் விலகல் குறித்த பல்வேறு வதந்திகள் எழுந்துவந்து சூழலில், பஞ்சாபில் அவரது உறவினர்கள் மீது மர்ம கும்பல் நடத்திய தாக்குதலே அவரின் விலகலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ஆண்டு, பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் உள்ள ரெய்னாவின் உறவினர் வீட்டில் நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், திருடும் நோக்கத்துடன் வீட்டிலிருந்தவர்களை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் நெருங்கிய ரெய்னாவின் உறவினர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவந்த சூழலில், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு முடிந்துவிட்டதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.