நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், பா.ஜ.க கூட்டணி 297 இடங்களிலும், இந்தியா கூட்டணி 227 இடங்களிலும், மற்ற கட்சிகள் 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நடைபெற்ற மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டதில் இருந்து பல வேட்பாளர்களின் பேச்சு சர்ச்சையாக மாறி பெரும் விவாதத்தை கிளப்பி வந்தது.
அதில், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மாதவி லதா போட்டியிட்ட போது, தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்குப்பதிவு நடைபெற்ற போதும் சர்ச்சையில் சிக்கினார். இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் கலந்து கொண்ட போது, அவர் தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து அருகில் இருக்கும் மசூதியை நோக்கி எய்தார். இது பெரும் பேசு பொருளாக மாறியது. அதே போல், ஹைதராபாத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற போது, வாக்களிக்க வந்த ஏராளமான இஸ்லாமிய பெண்களிடம், ஆதார் கார்டை காட்ட சொல்லியும், அவர்கள் அணிந்திருந்த பர்தாவை தூக்கச் சொல்லி, முகத்தை காட்டும்படியும் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இவர் போட்டியிட்ட ஹைதராபாத் தொகுதியில், ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் சார்பில் முகமது வலியுல்லா சமீர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அசாதுதீன் ஓவைசி தற்போது அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து மாதவி லதாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நவ்நீத் ராணா, பா.ஜ.க சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டார். இவர், ஹைதராபாத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மாதவி லதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அசாதுதீன் ஓவைசியை கடுமையாக தாக்கிப் பேசி சர்ச்சையில் சிக்கினார். குறிப்பாக, அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் அக்பரூதீன் கடந்த 2013ஆம் ஆண்டு பேசிய கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசினார். அதில் அவர், “அக்பராவுதீன் ‘15 நிமிடம் காவல்துறையை அகற்றுங்கள், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவோம்’ என்கிறார். நான் அவரிடம் சொல்கிறேன், நீங்கள் 15 நிமிடம் எடுத்துக் கொள்வீர்கள், ஆனால், எங்களுக்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும். நீங்கள் 15 வினாடிகள் காவல்துறையை அகற்றினால், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எங்கு சென்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது” எனப் பேசினார். இது பெரும் விவாதமாக மாறியது. இவர் போட்டியிட்ட அமராவதி தொகுதியில், தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார்.
அதே போல், ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர், ‘நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என்று கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாக தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருந்தார். இவர் அந்த தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.