மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளையும், பாஜக கட்சி 18 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த மாநிலத்தில் முதன் முறையாக அதிக மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தெரிவித்து மனு அளித்திருந்தார். ஆனால் கட்சித் தலைமை மம்தாவின் மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும், சிபிஎம் கட்சியை சேர்ந்த 1 எம்.எல்.ஏ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 கவுன்சிலர்கள் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக கட்சியில் இணைந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் தலைமையில் நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளதால் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே போல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் அரசு எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து மம்தா பானர்ஜி தனது கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.