
மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.