புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 550-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தினக்கூலி அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் அவர்களை ஜிப்மர் நிர்வாகம் தினக்கூலி ஊழியர்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தினக்கூலி ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு செலுத்திய இ.பி.எப் மற்றும் சம்பள ரசீதை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை புறக்கணித்து மூன்று நாள்களாக நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இயக்குநர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் தொடர்ந்து ஜிப்மர் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டம் காரணமாக துப்புரவுப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் இதனையறிந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஜிப்மர் இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதன்படி இ.பி.எஸ் ரசீது, சம்பள ரசீது உட்பட சில கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டதன் பேரில் போராட்டத்தை ஊழியர்கள் வாபஸ் பெற்று நாளை முதல் பணிக்கு திரும்ப உள்ளதாக தொழிலாளர் சங்கம் தெரிவித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, " மத்திய அரசின் அங்கமான ஜிப்மர் நிர்வாகத்தின் மீது மத்திய அரசுக்கு எப்பொழுதும் ஒரு தனிப்பட்ட கவனம் உள்ளது. எனவே ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கலந்து பேசி நிரந்தர தீர்வு காணப்படும். அதுமட்டுமின்றி தற்போது சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள சில கோரிக்கைகள் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் வழக்குகள் முடிந்தவுடன் அவர்களது முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை வழங்க நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்தார்.