மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா சென்றிருந்தார். பின்பு வாகனத்தில் மூலம் பிரச்சாரப் பயணத்தைக் தொடங்கிய அமித்ஷாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அதே கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் அருகில் இருந்த இருச்சக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதே போல் பல்கலைக் கழகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநில சீர்திருத்தத்திற்கு மிகப்பெரிய பங்கை ஆற்றியவர் வித்யாசாகர் ஆவர். இவரின் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தான் உடைத்தது என பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டினார். கொல்கத்தாவில் நடந்த வன்முறையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியதாக கூறி அம்மாநில முதல்வர் மம்தாவுக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்று மவுன போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் கட்சி தொண்டர்கள், தலைவர்கள் தங்களது ட்விட்டர் டிபியில் வித்யாசாகர் புகைப்படத்தை வைத்தனர். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மம்தா வித்யாசாகர் சிலையை திரிணாமுல் கட்சி சேதப்படுத்தியதற்கான ஆதாரங்களை மோடி தராவிட்டால் அவரை சிறைத் தள்ளுவேன் என மோடியை கடுமையாக விமர்சித்தார்.
எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா ஆவேசமாக பேசினார். ஏற்கனவே கொல்கத்தாவில் வித்யா சாகர் சிலையை கட்டமைத்து தரப்படும் என பிரதமர் உறுதி அளித்திருந்தார். இதற்கு பதிலடியாக வித்யாசாகர் சிலையை நாங்களே கட்டமைத்து கொள்கிறோம் எனவும், எங்களுக்கு ஏன் பாஜகவின் பணம்? மேற்கு வங்கத்தில் போதுமான அளவு வளம் உள்ளது என்று மம்தா பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள், பாஜக பொதுக் கூட்டங்களுக்கு தடை , பேரணிக்கு தடை , பாஜக முதல்வர்கள் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை என இந்திய மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தான் பக்கம் திருப்பியுள்ளார் மம்தா என்றால் எவராலும் மறுக்க முடியாது.