டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று (23/04/2021) காலை 10.00 மணிக்கு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனையின்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, கரோனா தடுப்பூசி போடும் பணி குறித்தும் கேட்டறிந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். மருந்துகள், ஆக்ஸிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், அதனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதைத் தடுக்கக்கூடாது. அனைவரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்றினால் வளங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாது. மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தில் ரயில்வே மற்றும் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் டேங்கர்கள் விரைந்து சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கரோனா சிகிச்சை மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.