மழை நீரில் முதலை அடித்து வந்த சம்பவம் தெலங்கானாவில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ஹன்மகொண்டா பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில் மழை நீரானது தேங்கி நின்றது. மழை நீரை அப்புறப்படுத்த ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியிலிருந்த புதர்கள் அகற்றப்பட்டு மழைநீர் விடுவிக்கப்பட்டது. அப்பொழுது தேங்கி நிற்கும் மழைநீரில் முதலை ஒன்று இருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி கயிற்றில் சுருக்கு போட்டு முதலையை வெளியே கொண்டு வந்தனர். அந்த பகுதியில் மழைநீர் தேங்கும் நேரங்களில் இதுபோன்று முதலைகள் அடித்து வருவது வழக்கமான ஒன்றுதான், இருப்பினும் தற்போது அளவில் பெரிய முதலை சிக்கியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.