லுங்கியுடன் லாரி ஒட்டிய ஓட்டுநர் ஒருவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாரி ஓட்டுநர் லுங்கியுடன் வாகனத்தை இயக்கினார் என கூறி உத்தரப்பிரதேச காவல்துறை அவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக லக்னோவின் போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங் கூறும்போது, ஆடை ஒழுங்கு சட்டம் என்பது 1989ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு சட்ட திருத்தத்திற்கு பிறகு ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த சட்டத்தின்படி வாகனங்களை ஓட்டும் அனைவரும் இந்த சட்டத்தை கட்டாயம் பின்பற்றவேண்டும், ஆனால் இதுவரை யாருமே இதனை சரியாக பின்பற்றுவதில்லை என கூறினார். மேலும் பேசிய அவர், இந்த சட்டத்தின்படி, கனரக வாகன ஓட்டுநர்கள் பேண்ட், சர்ட் அல்லது டி-சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும், ஆனால் இப்போதைய சூழலில் பள்ளி வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே இது குறிப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.