இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. முழு ஊரடங்கின்போது நடத்தப்படும் திருமணத்திற்குச் செல்வோர், பத்திரிக்கைகளைக் காட்டிவிட்டுச் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.04.2021) பல்வேறு திருமணங்களில் மணமக்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும் அபிராமி என்ற இளம்பெண்ணுக்கும் 2021 ஏப்ரல் 25ஆம் தேதி திருமணம் செய்ய முன்னதாக அவர்கள் பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சரத்மோன் மற்றும் அவரது தாயார் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், சரத்மோன் மற்றும் அபிராமிக்கு திட்டமிட்ட நாளில் (ஏப்ரல் 25) திருமணம் செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை, மணப்பெண் அபிராமி அதிகாரிகளின் வழிக்காட்டுதல்படி கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருமணம் செய்துகொள்ள அரசு தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கரோனா பாதுகாப்பு கவச உடையுடன் 25ஆம் தேதி, சரத்மோன் சிகிச்சை பெற்று வரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமி வந்தார். அங்கு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை அபிராமி திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட சரத்மோன் - அபிராமி தம்பதிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.