நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு விசாரிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை இன்று காலை 10 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்ப்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி, பா.ஜ.க. நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் எதன் அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைத்தார் என கேள்வி எழுப்பினார். பின்னர் நாளை மாலை 4 மணிக்கு இரண்டு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா,
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என 100 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.