கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து சுயேட்சைகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தன. மஜத கட்சியின் மாநில தலைவராக இருந்த குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி எற்பட்டது. முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்களை சரிகட்டும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும், எனினும், எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து, கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை சந்தித்ததால், 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு கர்நாடக மாநிலத்தில் பொறுப்பேற்றது. அதேசமயம், தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தங்களது மீதான சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே, கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லாது என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த தொகுதிகள் தவிர்த்து ஏனைய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
எனவே, இந்த இடைத்தேர்தலில் தங்களை போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5ஆம் தேதிக்கு இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த சூழலில் கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் எனவும், அதேசமயம், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 17 பேர் பாஜகவில் நாளை இணையவுள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்