எங்கள் திருமணம் கேலிக்கூத்தல்ல என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவோம் என ஹதியா தெரிவித்துள்ளார்.
தனது காதல் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கான சட்டப்போராட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வென்றிருக்கிறார் ஹதியா. கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு ஹதியா - ஷெஃபின் திருமணத்தை தடைசெய்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. மேலும், வயது வந்தவர்களின் திருமண விருப்பத்திற்குள் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனவும் சுட்டிக்காட்டியது.
தற்போது தனது கணவர் ஷெஃபின் ஜெகானோடு இணைந்திருக்கிறார் ஹதியா. இதுகுறித்து அவர் பேசுகையில், ‘உச்சநீதிமன்றம் எங்களை இணைந்திருக்க அனுமதிப்பதற்கு முன் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனக்கு விருப்பம் இல்லாதவர்களின் அறிவுரைகளைக் கேட்க கட்டாயப்படுத்தப் பட்டேன். அவர்கள் குறிப்பாக இந்துத்வ அமைப்புகளான சங்பரிவாங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பிப்ரவரி 20, 2018 அன்று நான் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் இதைத் தெரிவித்திருந்தேன். ஆனால், ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இனி எங்கள் திருமணம் கேலிக்கூத்து அல்ல என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபிப்போம். அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறோம். ஷெஃபினோடு இருப்பதை நிம்மதியான தருணமாக உணர்கிறேன். என் வாழ்வின் வசந்தமான நிமிடங்களை மீண்டும் அனுபவிக்கிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.