உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிகள் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதேபோல் எதிர்க்கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என நேற்று அறிவித்தார்.
இந்தநிலையில் இன்று ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் பள்ளிகளை மேம்படுத்துவோம் எனவும், ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது; டெல்லி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது போல் பஞ்சாப் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்துவோம். அதை எப்படி செய்வது என்று எங்களுக்கு மட்டுமே தெரியும், வேறு எந்த கட்சிக்கும் தெரியாது. ஆசிரியர்களின் பல பிரச்சனைகளை அவசரகால அடிப்படையில் தீர்ப்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
18 வருட அனுபவத்திற்குப் பிறகும், பஞ்சாப் ஆசிரியர்கள் அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்கள். டெல்லியில், திறமையற்ற தொழிலாளர்களுக்கு கூட குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000. அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.இலவச மின்சாரம் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் சன்னி உறுதியளித்தார், இன்னும் எதுவும் நடக்கவில்லை. மொஹல்லா கிளினிக்குகளைப் பற்றி அவர் பேசினார் ஆனால் ஒன்று கூட அமைக்கப்படவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸில் உள்ள பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களின் குப்பைகளை நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் அதைச் செய்யத் தொடங்கினால், மாலைக்குள் 25 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் (பஞ்சாபில்) எங்களுடன் இணைவார்கள் என்று நான் சவால் விடுவேன். அவர்களின் 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2-3 எம்.பி.க்கள் எங்களோடு தொடர்பில் உள்ளதோடு எங்களுடன் சேர விரும்புகிறார்கள்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.