புதுச்சேரி பொதுப்பணித் துறையில் 1000க்கும் மேற்பட்டோர் கடந்த ஆட்சியின் போது வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்றும், அவர்களுக்கான மாத ஊதியம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் அறிவித்தும் இவர்களுக்கான வேலை வழங்காமல் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் 50க்கும் மேற்பட்டோர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.