தெலுங்கானா மாநிலத்தில், ஆட்சியர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில், பிரதீப் ஜெயின் என்பவர் மாவட்ட ஆட்சியரராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாவட்டத்தில் கீழ் உள்ள லகாசர்லா கிராமத்தில், மருந்து நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்கள் கருத்துக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கருத்துக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் ஜெயின் மற்றும் பிற அரசு அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அப்போது, அங்கு நிறுவனம் அமைப்பதற்கு கிராம பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களை அரசு அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆட்சியர் பிரதீப் ஜெயின் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில், ஆட்சியர் மீது தாக்குதல் நடத்த முயன்ற போது, ஊழியர்கள் அவரை காப்பாற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இருப்பினும், ஆத்திரம் அடங்காத பொதுமக்கள், தடியடி நடத்தியும் வாகனங்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிகள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.