அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன், சீன இராணுவம் மீதான ஆண்டு அறிக்கையை அண்மையில் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும், சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இடையேயான பிரச்சனைக்குரிய பகுதியில் 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், சீனா கிராமத்தை அமைத்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான பகுதி, பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறியுள்ளன.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் கூறியுள்ளதாவது, “சுபன்சிரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் அமைந்துள்ள கிராமம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் அந்தப் பிராந்தியத்தில் இராணுவ சாவடியை அமைத்துள்ளனர். சீனா மேற்கொண்ட பல்வேறு கட்டுமானங்கள் குறுகிய காலத்தில் கட்டப்பட்டவை அல்ல.
சீனா தற்போது கிராமத்தை அமைத்துள்ள பகுதியை சீன இராணுவம், 1959ஆம் ஆண்டு, லாங்ஜு சம்பவம் என்ற நடவடிக்கையில் அசாம் ரைபிள்ஸ் பிரிவின் எல்லை சாவடியை முறியடித்து கைப்பற்றியது.” இவ்வாறு அந்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1959ஆம் ஆண்டுவரை லாங்ஜு பகுதியில் இந்தியா எல்லைச் சாவடியை அமைத்திருந்தது. ஆனால் திபெத்தை உரிமை கொண்டாடும் சீனா, லாங்ஜு பகுதி திபெத்தின் மிகைதுன் பகுதியின் அங்கம் என கூறியதுடன், லாங்ஜு பகுதியில் அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் அமைத்திருந்த எல்லைச் சாவடி மீது தாக்குதல் நடத்தி அப்பகுதியைக் கைப்பற்றியது. அதிலிருந்து லாங்ஜு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.