மோடி ஒரு நாள் பயணமாக நேற்று உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு சென்றார். அங்கு ரூ.12 ஆயிரத்து 652 கோடி மதிப்பீட்டிலான தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். முற்றிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடைகளுக்கு கால் மற்றும் வாயில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதே இதன் நோக்கம். இதன்படி, மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் போன்ற 50 கோடிக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். மேலும், 3 கோடியே 60 லட்சம் எருது கன்றுகளுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடப்படும். புருசெல்லா என்ற பாக்டீரிய தொற்று, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுவதை தடுப்பதற்காக, இந்த தடுப்பூசி போடப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதும், 2030-ம் ஆண்டுக்குள் அவற்றை ஒழிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.
இதைத்தொடர்ந்துப பெண் துப்புரவு தொழிலாளர்கள் 25 பேரை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த பெண்களுடன் அவர் தரையில் அமர்ந்து உரையாடினார். கை உறையும், முக கவசமும் அணிந்திருந்த அந்த பெண்கள், குப்பை சேகரிப்பது மற்றும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுப்பது பற்றிய பிரதமரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, கால்நடைகள், மீன்கள் ஆகியவற்றுக்கும் பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.