புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவை சேர்ந்தவர்கள் ராசு - தமிழரசி தம்பதி. ராசு லாரிகளில் வரும் செங்கல் இறக்கும் வேலையும், தமிழரசி சித்தாள் வேலையும் செய்து வந்தனர். இவர்களுக்கு 5 பெண்பிள்ளைகள். 4 வது மகள் அஞ்சுகம். அரசுப் பள்ளியில் படித்த அஞ்சுகம் +2 வில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிப் படிப்பை முடித்த போது, “நான் டாக்டர் ஆகணும்; டாக்டராகி நம்மளப் போலவங்களுக்கு வைத்தியம் பார்க்கணும்” என்று கூறியிருக்கிறார். அதே ஆண்டில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்தது. தன் மகள் டாக்டர் என்ற பெருமிதத்தோடு அவரின் படிப்புச் செலவுக்காக தொடர்ந்து கூலி வேலை செய்து வந்தனர். எம்.பி.பி.எஸ் முடித்ததும் தொடர்ந்து எம்.எஸ் படித்தவருக்கு பல் மருத்துவர் கார்த்திக்குடன் திருமணமாகி கறம்பக்குடியிலேயே வசித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓ.ஜி படிப்பை தொடர்ந்தார். புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சில மாதங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த ஆறு மாதமாக பேறுகால விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று மதியம் திடீரென முதுகு வலி ஏற்பட உடனே தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெற்று வந்த திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் வலி கூடுதலாகி மூச்சுத்திணறலும் ஏற்பட உடனே தான் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு போக கூறியுள்ளார். அவர் பணியாற்றிய அதே இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் டாக்டர் அஞ்சுகாவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தலா 2.500 கிராம் எடையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் அதன் பிறகு அஞ்சுகாவிற்கு நினைவு திரும்பவில்லை. தொடர்ந்து இரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அங்கு பணியில் இருந்த மருத்துவ குழுவினர் தீவிரச் சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தைகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு பிறகு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவ குழுவினரின் தொடர் சிகிச்சை அளித்தும் கூட தனக்கு பிறந்த குழந்தைகளை பார்க்காமலேயே சிகிச்சை பலனின்றி அஞ்சுகா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் மட்டுமின்றி சக மருத்துவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தான் பணியாற்றிய அரசு மருத்துவமனையிலேயே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கல்லும், மண்ணும் சுமந்து புள்ளைய படிக்க வச்சோம். அஞ்சுகா டாக்டர் ஆன பிறகு தான் வெள்ளை வேட்டி கட்றோம். இப்ப தான் எல்லாரும் எங்களை டாக்டர் அப்பா, டாக்டர் அம்மானு சொல்லும் போது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோம். ஆனா இப்ப எல்லாத்தையும் ஏமாற்றிட்டு போயிட்டியேம்மா.. உனக்காகத் தானே இவ்வளவு நாளும் உழைச்சோம்.. பல உயிர்களை காப்பாத்திய நீ உன்னை காப்பாத்திக்க முடியாம போச்சே...” என்று கதறி அழும் பெற்றோரை தேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர் உறவினர்கள்.