சிதம்பரம் நடராஜர் கோவிலில் சித்சபையில் உள்ள நடராஜர் சிவகாம சுந்தரிக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆணி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது ஆயிரம் கால் மண்டபத்தில் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும் மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபைக்கு வெளியே உள்ள கனக சபையிலும் சாமி சிலைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் சித்திரை மாத மகா அபிஷேகம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதனையொட்டி காலை கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே அதிருத்ர ஹோமம் நடைபெற்றது. இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை விபூதி, பால், தயிர், தேன், சக்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாரதணை நடைபெற்றது.
இந்த மகா அபிஷேகத்தில் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குடும்பத்தினருடன் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடராஜர் கோவிலில் ஒரே நாளில் குரு பெயர்ச்சி மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோயிலுக்கு உள்ளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இது போன்ற காலங்களில் பக்தர்கள் இடையூறு தரிசனம் செய்ய சிறப்பு ஏற்படுகளை கோவில் நிர்வாகம் செய்யும் தீட்சிதர்கள் செய்யாததால் பக்தர்கள் கோயில் கொடிமரம் உள்ளிட்ட பல்வேறு உயரமான இடங்களில் ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு ஆபத்தான முறையில் முயற்சித்தனர். எனவே கோவில் நிர்வாகம் அதிகமான பக்தர்கள் வரும் விசேஷ காலங்களில் அவர்களுக்கு அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கின்றனர்.