ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்கள் எட்டுப் பேரை பாஜகவினர் மானேசரில் உள்ள சொகுசுவிடுதி ஒன்றில் தங்கவைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது மத்தியப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச பாஜக தலைவர்கள் எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஹரியானாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியை கலைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தருவதாக பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார். மொத்தம் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் பாஜகவின் பக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், இந்த விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப உள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் புனியா தெரிவித்துள்ளார்.