கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்களுக்கு மோர் பானங்கள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வெயிலை எதிர்க்கொள்ள நீர் மோர், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கும்படி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பாக பந்தல்கள் அமைத்து நீர் மோர், பழவகைகள் உள்ளிட்ட பொருட்களைக் காங்கிரஸ் சார்பாக நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. ஐந்து லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மாயமாகி இருப்பது குறித்து உரிய பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் இத்தனை கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் ஒன்றிய அரசுக்கு தெரியாமல் வர வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள், இந்தப் போதைக் கலாச்சாரத்தில் பாழடைவதற்கு ஒரே காரணம் பா.ஜ.க தான். இதை நான் ஆதாரப்பூர்வமாக சொல்கிறேன்.
மேகதாது அணை கட்டபோகிறோம் என்று கர்நாடகா அரசு அரசியலுக்காக சொல்கிறது. உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு மிக தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் ஒரு கல்லைக் கூட எடுத்துவைக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பார்த்துக்கொள்ளும். அவர்களுக்காக குரல் கொடுக்கும். காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், காவிரி நீர் மேலாண்மையும் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்துவது ஒன்றிய அரசின் கையில் இருக்கிறது. ஆனால், அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு அரசியலாக்குகிறார்கள்.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஒருவருக்கு ஒரு தொகுதி தான் ஒதுக்கப்பட வேண்டும் கட்சித் தலைமை உறுதியாக இருக்கிறார்கள். கண்டிப்பாக அகில தலைவர்கள் அதனை சரி செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பேசினார்.
படங்கள் : எஸ்.பி.சுந்தர்