இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு, பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முற்பகுதியில் 15 -18 வயது சிறார்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், 2005, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் பிறந்த சிறார்கள், அதாவது ஏற்கனவே 15 வயது ஆனவர்களும், 2023 ஜனவரி 1 ஆம் தேதி 15 வயதை எட்டுபவர்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்திய முழுவதும் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு தேசிய நிபுணர் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.