பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிறகு கடந்த மே - 18 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக கேதார்நாத் மலை பகுதியில் உள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். இந்த குகையில் விடிய விடிய பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த குகைக்கு யாத்ரீகர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கேதார்நாத்தில் தரிசனம் மேற்கொள்ள வரும் யாத்ரீகர்கள் பலரும், இந்த குகைக்கு வந்து தியானம் செய்து வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இந்த குகையில் தியானம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைப்பெற்று வருவதாகவும், இருப்பினும் 10 நாட்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவு தீர்ந்து விடுவதாகவும், யாத்ரீகர்கள் வருகை அதிகரிப்பால் இந்த தியான குகை போல் மற்றொரு குகை அமைக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குகையில் தியானம் செய்வதற்கு ரூபாய் 1500 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கேதார்நாத் குகையில் தியானம் செய்ய முன்பதிவு செய்யும் யாத்ரீகர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னதாக குப்தகாசியில் தங்கி அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பே கேதார்நாத்திற்கு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.