உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே மிதந்து வருகிறது. இந்த வெள்ளத்தின் காரணமாகவும், இந்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டிட இடிபாடு, வெள்ளம் உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், இந்த மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல் பிரபல சுற்றுலாத்தலமான நைனிடால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்புப்பணிகளில் மூன்று இராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல் உத்தரகாண்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் விளக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், உத்தரகாண்ட் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அம்மாநிலத்தில் இன்று முதல் மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.