உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மாபெரும் சரிவை சந்தித்தது. இதனால், அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து தீங்கு இழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆதாரமற்றது என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என அதானி குழுமம் தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்த ஆவணங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது என தடாலடியாக கூறியது. இது தொடர்பான உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம், அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(SEBI) தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஹிண்டன்பர்க் பர்பரப்பு அறிக்கை வெளியிட்டது. மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டி இருந்தது. அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தைச் செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் தலைவர் மீதே ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு புகார் கூறியது இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், மாதபி புரி புச் செபியின் தலைவராக இருந்த போது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் ஊதியமாக ரூ.16 கோடி பெற்றிருப்பதாகக் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, பங்குச்சந்தையில் நாம் முதலீடு செய்யும் பணத்தை ஒழுங்குபடுத்துவதே செபியின் வேலை. இது முதலீடு விஷயத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், நமது நாட்டில் சதுரங்க ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. செபியின் தலைவர் மாதபி புரி புச் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வரை செபியின் நிரந்தர உறுப்பினராக இருந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி முதல் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
செபியின் தலைவரை நியமிக்கும் குழுவில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில்தான் மாதபி புரி புச் செபியின் முழுநேர ஊழியராக இருந்தபோது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து கடந்த 2017 முதல் 2024 வரை வழக்கமான ஊதியமாக ரூ. 16.80 கோடி வரை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல், பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) அதற்கான வரிவிலக்கு ஆகியவற்றையும் பெற்று வந்துள்ளார்.
செபியின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, எப்படி ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கியிடம் இருந்து ஊதியம் பெற முடியும்? இது செபியின் விதிகளில் பிரிவு 54 -ஐ மீறுவதாகும். எனவே, செபி தலைவர் மாதபி புரி புச் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.