உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தனர். இந்த கூட்டணி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பாஜக கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரான மாயாவதி சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கூட்டணி விலகல் குறித்து பேசிய மாயாவதி உத்தப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி என்று அதிரடியாக தெரிவித்தார். அதே போல் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி விலகல் தற்காலிகமானது என தெரிவித்தார். மேலும் இனி வரும் தேர்தல்களில் எவ்வாறு பணியாற்றுவது? என்பது தொடர்பான புதிய வியூகத்தை மாயாவதி வகுத்து தனது கட்சியின் தொண்டர்களிடம் வழங்கியதாகவும், அதன் படி தொண்டர்கள் களப்பணியாற்ற உள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.