உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் பயிலும் குழந்தைகளில் ஒரு இஸ்லாமிய மாணவரை அடிக்கும்படி, சக மாணவர்களுக்குச் சொல்லும்படியான வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. அதுமட்டுமின்றி அந்த ஆசிரியர், சிறுவனுடைய இஸ்லாமிய மதத்தைக் குறிப்பிட்டு, “முகமதிய குழந்தைகள்” எனவும் “இந்த இஸ்லாம் குழந்தைகள் அனைவரும் எந்தப் பகுதிக்காவது செல்லுங்கள்” என்று இழிவாகப் பேசியிருந்தார்.
மேலும் அந்த வீடியோவில், அந்த இஸ்லாமிய மாணவனை அறைந்துவிட்டு உட்கார்ந்த இன்னொரு மாணவனை பார்த்து ஆசிரியை திரிப்தா தியாகி, “ஏன் இவ்வளவு லேசாக அடிக்கிற? அவனை கடுமையாக அடி” என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அந்த பள்ளி ஆசிரியை திர்ப்தா தியாகி தற்போது ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் மாணவர்கள் தங்கள் வகுப்பு இஸ்லாம் மாணவனை அறையச் சொன்னதன் பின்னணியில் தனக்கு எந்தவித வகுப்புவாத நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அதை செய்ய வைப்பதே எனது நோக்கம். மேலும், நான் ஊனமுற்றவர். என்னால் எழுந்து நிற்க முடியாது. அதனால், வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களை சில குழந்தைகளை வைத்து இரண்டு முறை அடிக்க சொன்னேன். அடிவாங்கிய பிறகு அந்த மாணவன் நன்றாக படிக்கவும், வீட்டுபாடங்களையும் முடிக்கவும் செய்தார்.
எனக்கு இந்து - இஸ்லாம் மத வேறுபாடு இல்லை. இந்து இஸ்லாம் மதத்தின் மீது பிரச்சனைகளை உருவாக்குவதற்காக அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. பல இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்களால் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாது. அது மாதிரியான குழந்தைகளுக்கு நான் இலவசமாக பாடம் கற்பித்து வருகிறேன். இஸ்லாமியர்களை சித்தரவதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” என்று பேசியுள்ளார்.