லவ் ஜிகாத் தொடர்பான சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தன. அதன்படி, இந்த சட்டத்திற்கான பரிந்துரையைத் தயார் செய்துள்ள உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சகம், அதனை உத்தரப்பிரதேச சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற சட்டங்கள் குறித்து விமர்சித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "லவ் ஜிகாத் என்ற வார்த்தையை பாஜக உற்பத்தி செய்துள்ளது. தேசத்தைப் பிளக்கவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் இதனை அக்கட்சி உருவாக்கியுள்ளது. திருமணமென்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. அதனைத் தடுக்க சட்டம் இயற்றுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எந்த நீதிமன்றமும் இதை ஏற்காது. காதலில் ஜிகாத்துக்கு இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.