ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் "என் சொந்தக் காரணமாக என் பதவியை ராஜினாமா செய்கிறேன், மேலும் என்னுடன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக பொறுப்பேற்றார்.
முதலாக கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா "ரிசர்வ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது" என அறிவித்திருந்தார். அதன் பின் ரிசர்வ் வங்கிக்கு வரும் உபரி தொகைத் தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து மோதல்கள் இருந்துவந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்த வாரியக் கூட்டத்தில் உர்ஜித் படேல் ராஜினாமாவை அறிவிக்கலாமெனவும் கருத்துக்கள் நிலவிவந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் ராஜினாமா தொடர்பாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.