Skip to main content

சொத்துமதிப்பை 500% உயர்த்தும் அரசியல்வாதிகள்- அரசு உறங்குகிறதா?

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
சொத்துமதிப்பை 500% உயர்த்தும் அரசியல்வாதிகள்- அரசு உறங்குகிறதா?

தேர்தலுக்கு முன்னும் பின்னும் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு 500%க்கும் மேல் உயருவதை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தலுக்கும் முன்பும் பின்பும் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் குறித்து, நீண்டகாலமாக வாய்வழி கருத்துகள் பரப்பப்படுவது வழக்கம். ஆனால், இது ஒரு பொதுநல வழக்காக முன்னெடுக்கப்பட்டு, அது அரசின் நடவடிக்கைகள் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பியிருப்பது இதுவே முதல்முறை.

இதுகுறித்து லக்னோவைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த கூட்டியக்கம் என்ற தன்னார்வல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. இந்த மனுவில் தேர்தல் விதிமுறைகளில் இதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துமதிப்பு குறித்த சரியான விவரங்களை வழங்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு தேர்தல்களுக்கிடையில் ஒரு அரசியல்வாதியின் சொத்துமதிப்பு 500%க்கும் மேல் உயரும் என்றால், அந்த அரசியல்வாதியின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? தேர்தல் சீர்திருத்தங்களில் நீங்கள் (மத்திய அரசு) எந்தவிதமான குறைபாடுகளையும் வைக்கவில்லை. ஆனால், இதுபோன்ற விவகாரங்களில் போதிய தகவல்களைத் திரட்டுவதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடா? அடிப்படைத் தகவல்களைத் திரட்ட முடியாதா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்