ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளை கொண்டது. அந்தவகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மை தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கான முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுகள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும் எனவும், அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழும் 15 நாட்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் யுபிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.