இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி, பா.ஜ.க. அஸ்வினி உபாத்யாயா சார்பில் தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.
அப்போது இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்தித்தாளில் படித்தோமே தவிர, தங்களுக்கு கிடைக்கவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டி வாதங்கள் முன் வைக்கப்பட்ட போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்றும், இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், இலவசத் திட்டங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் விஷயத்திற்குள் செல்ல விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி, அது ஜனநாயக விரோத செயல் என்றும் கூறினார். எனவே, தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி உள்ளிட்ட அனைவரின் கருத்தையும் தெரிவிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.