கரோனா பரிசோதனைக்கு வரும் மக்களிடம் இருந்து எடுக்கப்படும் சோதனை மாதிரிகள் ஆபத்தானவை என்பதால் முறையான பயிற்சியின்றி அவற்றைக் கையாளக்கூடாது என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பரிசோதனைக்கு வரும் மக்களிடம் இருந்து எடுக்கப்படும் சோதனை மாதிரிகள் ஆபத்தானவை என்பதால் முறையான பயிற்சியின்றி அவற்றைக் கையாளக்கூடாது என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் அதிக ஆபத்து கொண்ட தொற்றுக்கிருமி வகையாகும், வேகமாகப் பரவும் திறன் கொண்டது. எனவே கரோனா வைரஸ் மாதிரிகளை அதிக பரிசோதனைக் கூடங்களில் கையாள்வது, அதிலும் குறிப்பாக போதிய பயிற்சியில்லாத பணியாளர்களைக் கொண்டு மாதிரிகளைக் கையாள்வது வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். பரிசோதனைச்சாலைகளில் வைரஸ் பரவும் அபாயம் ஏற்படலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 126 அரசு மருத்துவமனைகள் மற்றும் 52 தனியார் பரிசோதனை மையங்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையைச் சேர்ந்த மையங்களைத் தவிர்த்து, மத்திய பயோடெக்னாலஜி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில், அணுசக்தித் துறை ஆகியவற்றின் பரிசோதனை மையங்களில் கோவிட்-19 மாதிரிகளைச் சோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது.