பப்ஜி விளையாட்டின் மூலமாக மாணவர்கள் சரியாக அவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, தேர்வுகளிலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என பல் வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.
அதன்படி நாட்டிலே முதல் முறையாக கடந்த ஆண்டு வேலூர் பல்கலை கழகத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் மாவட்டத்தில் இந்த விளையாட்டை மார்ச் 9-ம் தேது முதல் தடைவிதித்தது அந்த மாவட்ட நிர்வாகம். இதனிடையில் தடையை மீறி பப்ஜி கேம் விளையாடியதாக இந்த மாதம் மத்தியில் 10 கல்லூரி மாணவர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த விளையாட்டு எந்த அளவுக்கு ஒருவரை அடிமையாக்கும் என்பதற்கு உதராணமாக, ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடாக மாநிலத்தில் உள்ள கடாக் பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர், தனது கல்லூரி தேர்வில் பாடம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாததால், பப்ஜி விளையாடுவது எப்படி என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்த மாணவர், ''எனக்கு பப்ஜி கேம் மிகவும் பிடித்துவிட்டது. விளையாடுவதற்காக கல்லூரிக்குகூட செல்லாமல் நான் இருப்பேன். தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகத்தான் நான் பப்ஜி விளையாட தொடங்கினேன். அதன் ஆர்வத்தால் தேர்வில் கவனம் கொள்ள முடியவில்லை. நான் எனது தேர்வில் பப்ஜி குறித்து எழுதியதால் எனக்கே என் மேல் கோபமாக உள்ளது. தற்போது என் ஃபோனை எனது பெற்றோர்கள் பிடிங்கிவிட்டனர். ஆனாலும் என் எண்ணமெல்லாம் பப்ஜி மீதே உள்ளது. அது எவ்வளவு அபாயகரமான விளையாட்டு என்பது எனக்கு தற்போது புரிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
மாணவர் குறித்து பேசிய அவரது ஆசிரியர், ''பொதுவாக மாணவர்கள் தங்களது தேர்வுதாளில் படத்தின் வசனங்கள் அல்லது பாடல் வரிகளை எழுதிவைப்பார்கள். ஆனால் இந்த மாணவன் பப்ஜி விளையாட்டு குறித்து விரிவாக எழுதி வைத்துள்ளான். இது மிகவும் அபாயகரம் என்பதை உணர்ந்து, உடனடியாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் மாணவரை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்து வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.