இந்திய நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு கரோனா இரண்டாவது அலையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கூடியது. இந்த குழுவின் தலைவராக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருந்து வருகிறார். இன்று கூடிய இந்த பொதுக்கணக்கு குழு மத்திய அரசு கரோனவை கையாண்ட விதம் குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பொதுக் கணக்கு குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை மதிப்பாய்வு செய்யவேண்டும் என கூறியதாகவும், அதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் பொது கணக்கு குழுக் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாஜக எம்.பி. ஜகதம்பிகா பால் மற்றும் ஜே.டி.யு எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனைத்தொடர்ந்து பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் முடிவடைந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.