புதுச்சேரியில் மீன் வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிதாக மீன் அங்காடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் அங்காடியில் மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. பாரம்பரியமாக நாங்கள் இதே மீன் அங்காடியில் மீன் விற்பனை செய்து வருவதால் வேறு இடத்திற்கு மாற முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த மீன் வியாபாரிகள், நவீன மீன் அங்காடிக்கு செல்ல அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீன் வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் இரண்டு மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெற்று வருவதால் நேரு வீதி, காந்தி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து எங்களுக்கு உறுதிமொழி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மீனவர்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.