டெல்லி அரசு, தனது மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிசெய்ய அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை வாரியம், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர் அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார். மேலும், அவர் விடுமுறையில் இருப்பதாகவே கருதப்படுவார் என ஒரு உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவிற்குப் பிறகு 95 சதவீத டெல்லி அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், டெல்லி அரசின் பல்வேறு துறைகள், கட்டாய தடுப்பூசி உத்தரவை ஊழியர்களுக்கு நியாபகப்படுத்தும் வகையில் சுற்றறிக்கையை அனுப்பி வருகின்றன.
அந்த வகையில், டெல்லியின் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தடுப்பூசி தொடர்பான உத்தரவை நினைவுபடுத்தும் விதமாக தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது. அதாவது பேரிடர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவை சரியான காரணமின்றி பின்பற்றாதவர்களுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51 (பி) படி, ஒருவருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.