தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி (27.08.2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் ‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 30 ஆம் தேதி (30.08.2024) பதில் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ‘தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்த சமக்ரா சிக்ஷா திட்டத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்தவும், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஒரு அளவுகோல் அமைக்கவும் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தைத் தமிழகம் ஏற்றுக்கொள்வது முக்கியம் ஆகும். மத்திய, மாநில அரசின் கூட்டு முயற்சிகள் மூலம், அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை வளர்க்கும் ஒரு கல்வி முறையை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே தமிழக அரசு அளித்த உறுதிமொழியின்படி, பிரதமரின் ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் தனியார் ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்றைச் சுட்டுக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “புதிய கல்விக் கொள்கையை மறுத்ததற்காகச் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி அளிப்பது மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்குத் தாராளமாக மத்திய அரசு நிதி அளிக்கிறது.இது தான தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டமிடலா?. இது குறித்து முடிவு செய்ய நம் நாட்டு மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவை மேற்கோள்காட்டி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது. எவ்வாறாயினும், ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது, அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவின் மதிப்புக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கை பரந்த அளவிலான ஆலோசனைகள் மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் இந்திய மக்களின் கூட்டு ஞானத்தைக் கொண்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு உங்கள் ‘கொள்கை ரீதியான’ எதிர்ப்பு குறித்து நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்: 1. தமிழ் உட்படத் தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?. 2. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?. 3. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?. 4. புதிய கல்விக் கொள்கையின் முழுமையான, பல ஒழுங்குமுறை, சமத்துவம், எதிர்காலத்தோடு உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?. இவ்வாறு இல்லாவிட்டால், உங்கள் அரசியல் ஆதாயங்களை விடத் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.