Skip to main content

மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்  ராஜினாமா!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Union Minister Narendra Singh Tomar has resigned!

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

 

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல்,  கடந்த 4ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

இந்த தேர்தல்களில் மத்திய அமைச்சராக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். அதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உட்பட 10 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்க முடியாத காரணத்தினால், பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

 

அதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (06-12-23) நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

 

அதே போல், மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அருண் சாவோ, கோமதி சாய் ஆகிய 2 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யவர்தன் ரத்தோர், தியா குமார், கிரோரி லால் மீனா ஆகிய 3 பேரும் நேற்று (06-12-23) தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்