நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் ஈடுபட்டிருந்த ஆறு பேரையும் ஏற்கனவே டெல்லி காவல்துறை போலீசார் கைது செய்திருந்தார்கள். இதற்கு மூளையாக செயல்பட்ட மோகன் லலித் ஜா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் பாட்டியாலா நீதிமன்றத்தினுடைய உத்தரவின்படி 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன்கள் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக லலித ஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் எரிந்த நிலையில் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட புதிய எண்களை கொண்ட நபர்களுடன் பேசி வந்தது டெல்லி காவல்துறையால் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவர்கள் பயன்படுத்தி செல்போன்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கொண்டு மேலும் விசாரணையை தீவிரப் படுத்த போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.