இந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, புதுச்சேரி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இருப்பினும், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகள் உட்பட அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரிகள், இந்திய விமானப் படை விமானங்கள், ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக டெல்லியில் உள்ள மயானங்களில் தங்களது உறவினர்களின் உடல்களை வைத்து மக்கள் காத்திருப்பது இந்திய மக்களை மட்டுமல்லாமல், பிற நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி மாநில துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான திருத்தச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, 'டெல்லியில் உள்ள சட்டமன்றத்தைவிட அதிகாரமிக்கவராக துணைநிலை ஆளுநர் மாறுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லி, யூனியன் பிரதேசம் என்பதாலும், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் இல்லங்கள் அமைந்திருப்பதாலும், நாடாளுமன்றம் அமைந்திருப்பதாலும், காவல்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகள் மத்திய அரசின் வசமே தற்போது வரை உள்ளது. இந்த நிலையில், அதிகார திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியாகியுள்ளதால், அம்மாநில துணைநிலை ஆளுநராக உள்ள அனில் பைஜாலுக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளிகளுக்கிடையே டெல்லி மாநில துணைநிலை ஆளுநருக்கான அதிகார திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.