இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 2600- ஐ கடந்துள்ளது. இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சகம், தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு கரோனா பரிசோதனைகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹுஜா, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி, அது கவலைக்குரிய விஷயம் என கூறியுள்ளார்.
"போதுமான சோதனை இல்லாத போது, சமூகத்தில் பரவியுள்ள நோய்த்தொற்றின் உண்மையான அளவைக் கண்டறிவது சாத்தியமற்றது" என தனது கடிதத்தில் கூறியுள்ள ஆர்த்தி அஹுஜா, "கவலைக்குரிய கரோனா வகையான ஒமிக்ரான் அதிகளவில் கண்டறியப்படுகிறது. அதிகளவில் தடுப்பூசி செலுத்திய பிறகும் பெரும்பாலான நாடுகள் கரோனா பரவல் அதிகரிப்பை கண்டு வருகின்றன. இந்தநிலையில் கரோனா நிலை மோசமடைவதை தடுக்க தொடர் முயற்சிகளும் விழிப்புணர்வும் தேவை" என குறிப்பிட்டுள்ளார்.
"ஒமிக்ரானின் கணிக்க முடியாத மற்றும் மிகவும் பரவக்கூடிய தன்மையையும் மற்றும் அறிகுறியற்ற பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதையும் மனதில் வைத்து, ஆரம்ப நாட்களிலேயே சோதனையை அதிகரிப்பது, பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களுக்கு வைரஸைப் பரப்பாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவும்" எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ள ஆர்த்தி அஹுஜா, கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம், கருவிகள், சோதனை வசதிகள் ஆகியவற்றின் போதுமான இருப்பை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.