கரோனா பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்க உகந்த முன்னேற்பாடுகளோடு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,127 ஆக உயர்ந்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் புதிதாக கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் பொதுமக்கள் பயம் இல்லாமலும், அதேநேரம் கவனத்துடனும் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தால், அதனை எதிர்கொள்ளும் விதமாக, டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு மருத்துவமனைகளை வலியுறுத்தியுள்ளோம். டெல்லியில் முதன்முதலில் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் மூலம் அவரின் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கும் கரோனா பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 14 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 25 பேருக்கு இந்தியாவில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி அரசு முன்னர் பட்டியலிட்ட 12 நாடுகள் மட்டுமின்றி, அனைத்து நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்" என தெரிவித்தார்.