நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாகுபாடற்ற முறையில் செயல்படுவதாகக் கூறி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நேற்று (10-12-24) நோட்டீஸ் அளித்தன. இது தொடர்பான விவாதம் இன்று (11-12-24) நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கடந்த 1952ல் இருந்து துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. அந்த பதவியை வகிப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எப்பொழுதும் விதிகளின்படி சபையை நடத்துவார்கள். ஆனால், இன்று, சபையில் விதிகளை விட அதிகமான அரசியல் உள்ளது.
மாநிலங்களவைத் தலைவர் ஒரு தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். எதிர்க்கட்சி தரப்பில் இருந்து, விதிகளின்படி முக்கியப் பிரச்னைகள் எழுப்பப்படும் போதெல்லாம், மாநிலங்களவைத் தலைவர் திட்டமிட்டு விவாதம் நடத்த அனுமதிப்பதில்லை. மீண்டும் மீண்டும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். அவர் தனது அடுத்த பதவி உயர்வுக்காக அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றுகிறார். மாநிலங்களவையில் குழப்பம் விளைவிக்கும் தலைவராக இருக்கிறார் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
மாநிலங்களவைத் தலைவரின் நடவடிக்கைகள் நாட்டின் கண்ணியத்தை கெடுத்துவிட்டன. நடக்கும் சூழ்நிலை காரணமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டுவிட்டது. அவருடன் எங்களுக்கு தனிப்பட்ட பகையோ அரசியல் சண்டையோ இல்லை. ஜனநாயகம், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்” என்று கூறினார்.