இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மருத்துவ நிபுணர்கள், மத்திய அமைச்சகங்களின் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக ரூபாய் 8,873 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. இந்த நிதியில் 50 சதவீதமான ரூபாய் 4,436.8 கோடியை மாநில அரசுகள் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரூபாய் 400 கோடியை பேரிடர் நிதியாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.