தண்டேவாடா மாவட்டத்தில், மாவட்ட காவல்படையைச் சேர்ந்த காவல்துறையினருக்கு அம்மாவட்டத்தில் உள்ள அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் அரண்பூர் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின் திரும்பினர். அவர்கள் செல்லும் பாதையில் வைக்கப்பட்ட குண்டு, வாகனம் கடக்கும்போது வெடித்ததில் 10 காவலர்கள் மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் உயிரிழந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல், ''காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நக்ஸல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் விடமாட்டோம்'' என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, முதல்வர் பூபேஷ் பெகலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசியில் பேசியுள்ளார். அப்போது, “மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்” என அவர் உறுதி அளித்துள்ளார். மாவட்ட காவல்படை என்பது மாவோயிஸ்டுகள் செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் அந்த மாநில அரசால் உருவாக்கப்பட்டதாகும்.
தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, “சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களின் கோழைத்தனமான தாக்குதலில் டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 11 வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வீர தியாகிகளுக்கும் எனது வீரவணக்கமும் அஞ்சலியும்” எனக் கூறியுள்ளார்.
தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.