டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வலிமையான சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தியப் பொருளாதாரம் 2021-ல் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். ஜி.எஸ்.டி வரி வசூல், ஆலை உற்பத்தி அதிகரிப்பு போன்றவை பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணிப்பதைக் காட்டுகிறது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க ஏதுவாக உரங்களுக்கு ரூபாய் 65,000 கோடி மானியம் தரப்படும். ஏற்றுமதியை ஊக்குவிக்க எக்ஸிம் வங்கிக்கு ரூபாய் 3,000 கோடி கூடுதல் நிதி வசதி ஏற்படுத்தப்படும். வீடுகள் வாங்குவோர், விற்பவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வரிச்சலுகை வழங்கப்படும்.
ஊரகப் பகுதியில் வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடுதலாக, ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கு கூடுதலாக ரூபாய் 18,000 கோடி ஒதுக்கப்படும். வீடு கட்டுமானங்கள் அதிகரிப்பால் 78 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இரும்பு, சிமெண்ட் தேவை அதிகரிப்பதால் அதையொட்டி பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம் கொண்டு வரப்படும். சிறு, குறு தொழில்களுக்கான அவசர கால கடனுதவி திட்டம் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது." இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர்களுடன் நிதித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.