
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை (15.03.2025) தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கை ஆகியவை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள். ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம். இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம். தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள் விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை மேற்கோள் காட்டி நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.