மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் இன்று (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியாக சென்று இன்று (13-02-24) டெல்லியை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். அதன்படி உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருந்து ஹரியானா வழியாக 2500 விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் பேரணியாக செல்ல முடிவெடுத்திருந்தனர். இதனையடுத்து டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட்களை கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் டெல்லி - ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலையின் நடுவே பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார், துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், காக்கர் ஆறு வழியாக விவசாயிகள் டிராக்டரில் செல்வதை தடுக்க ஆற்றுப்படுகையில் போலீசார் பள்ளங்களை தோண்டி போட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பேரணி நடத்தும் விவசாயிகளை கைது செய்வதற்காக டெல்லியில் உள்ள பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துவிட்டது. இது குறித்து டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், விவசாயிகளைக் கைது செய்வது தவறானது என்று கூறி மத்திய அரசுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை இன்று காலை 10 மணி அளவில் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி வருகின்றனர். அப்போது, விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க, விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி வருகின்றனர். இந்த பேரணி காரணமாக டெல்லி - காசிப்பூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.